நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : 'செயல்கள் அனைத்தும் எண்ணத்தைக் கொண்டே அமைகின்றன. ஒவ்வொர...
இந்த ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அனைத்து செயற்பாடுகளும் நிய்யத்தைக் கொண்டே கணிக்கப்ப்படுவதாக தெளிவுபடுத்துகிறார்கள். இந்த சட்டமானது வண...

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : 'செயல்கள் அனைத்தும் எண்ணத்தைக் கொண்டே அமைகின்றன. ஒவ்வொரு மனிதனுக்கும் தாம் எண்ணியதற்கேட்பவே கூலி கிடைக்கிறது. ஆகவே ஒருவர் இறைவனுக்காகவும் அவனது திருத்தூதருக்காகவும் ஹிஜ்ரத் செய்வாரேயானால் அது அல்லாஹ்வுக்காகவும் அவனது திருத்தூதருக்காகவுமே இருக்கும். ஒருவர் ஹிஜ்ரத் செய்வது சில உலக இலாபங்களுக்காக என்றால், அல்லது ஒரு பெண்ணைத் திருமணம் செய்வதற் காகத்தான் என்றால் அவர் அதற்கான பலனையே அடைவார். இமாம் புஹாரியின் அறிவிப்பில் ' செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொரு மனிதனுக்கும்; தாம் எண்ணியதற்கேட்பவே கூலி கிடைக்கிறது' என்று இடம்பெற்றுள்ளது.

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா கூறுகின்றார்கள் : 'யார் எம்முடைய இந்த மார்க்கத்தில் இல்லாத புதிய விடயம் ஒன்றை உருவாக்குகிறாரோ அது நிராகரிக்கத்தக்கதாகும்' (ஆதாரம் : புஹாரி, முஸ்லிம்). மற்றுமொரு அறிவிப்பில் பின்வருமாறு இடம் பெற்றுள்ளது : 'நம்முடைய விடயத்தோடு (மார்க்கப் போதனைகளோடு) ஒத்துப் போகாத ஒரு செயலை எவராவது செய்யின் அது நிராகரிக்கப்படும்'.

உமர் ரழியல்லாஹு அன்ஹு கூறினார்கள் : ஒரு நாள் நாங்கள் எல்லோரும் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுடன் உட்கார்ந்திருந்தோம். அப்போது வெண்ணிற ஆடையும், கரு நிற முடியும் கொண்ட ஒரு மனிதர் எங்கள் முன் வந்து நின்றார். பயணம் செய்ததற்கான அறிகுறிகள் எதுவும் அவரிடம் தென்படவில்லை. எங்களில் யாருக்கும் அவரைத் தெரியாது. அவர் நடந்து சென்று நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் முன் அமர்ந்தார். அவரது முழங்கால்களை நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்அவர்களின் முழங்கால்களுடன் சேர்த்தும், இரு கைகளைக் தனது கால்களின் மீது வைத்தும் அமர்ந்தார். பின்னர் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்அவர்களை நோக்கி 'முஹம்மதே, இஸ்லாத்தைப் பற்றி எனக்குச் சொல்லுங்கள்' என்றார். நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்அவர்கள் 'இஸ்லாம் என்பது உண்மையாக வணங்கப்படத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லையென்றும், முஹம்மது இறைவனின் தூதர் என்றும் சாட்சியம் கூறுவது, தொழுகையை நிறை வேற்றுவது, ஸகாத் கொடுப்பது, ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பது, உங்களால் முடிந்தால் ஹஜ் செய்வது இவைகளாகும் என்றார்கள். இதற்கு அவர் நீங்கள் சரியாகவே சொன்னீர்கள் என்றார். அவர் கேள்வி கேட்பதும் அதனை அவரே உண்மைப்படுத்துவதும் எம்மை ஆச்சரியத்திற்குற் படுத்தியது. பின்னரவர் 'ஈமான் குறித்து எனக்குச் சொல்லுங்கள்' என்றார். 'அது அல்லாஹ்வின் மீதும் அவனது வானவர்கள், அவனது வேதங்கள், அவனது தூதர்கள், இறுதி நாள் மீதும் நம்பிக்கை கொள்வதும், நல்லவைகளும் தீயவைகளும் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடக்கும் என்றும் நம்புவதுமாகும்' என்பதாக நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பதில் கூற, இதைக் கேட்ட அவர் நீங்கள் சரியாகவே சொன்னீர்கள் என்றார். தொடர்ந்து அவர் 'இஹ்ஸான் பற்றி எனக்குச் சொல்லுங்கள்' என்றார். 'நீங்கள் அல்லாஹ்வை நேரில் பார்ப்பது போன்று வணங்குவதாகும். நீங்கள் அவனைப் பார்க்காத போதிலும் அவன் மெய்யாகவே உங்களைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றான்' எனச் சொன்னார்கள். பின்னர் அவர் 'எனக்கு நியாயத் தீர்ப்பு நாள் குறித்துச் சொல்லுங்கள்' என்றார். அதற்கு நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் 'இந்தக் கேள்வியைக் கேட்பவரை விட கேட்கப்படுபவர் அதிகமாக அறிந்தவர் அல்லர்' என்றார்கள். (அதாவது அல்லாஹ் மாத்திரமே அதன் நேரத்தை அறிவான்). பின்னர் அவர் அதன் அடையாளங்கள் குறித்து எனக்குச் சொல்லுங்கள் என்றார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 'அடிமைப்பெண் தனது எஜமானியைப் பெற்றெடுப்பாள். மேலும் காலணிகளில்லாத, முறையான ஆடைகளற்ற, வறியவர்களான ஆடுமேய்ப்போர் ஆடம்பரமாக கட்டிடங்களைக் கட்டுவதில் போட்டி போட்டுக் கொண்டிருப்பதைப் பார்ப்பீர்கள்' என்றார்கள். பிறகு அவர் திரும்பிச் சென்றுவிட்டார். நான் அங்கேயே சிறிது நேரம் தாமதித்தேன். பிறகு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், 'உமரே! கேள்வி கேட்டவர் யாரென்று உங்களுக்குத் தெரியுமா?' எனக் கேட்டார்கள். 'அல்லாஹ்வும் அவனது தூதருமே நன்றாக அறிவார்கள்' என்றேன் நான். நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், அவர் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் ஆவார். அவர் உங்களுக்கு உங்கள் மார்க்கத்தைக் கற்றுத் தருவதற்காக வந்தார்' என்று கூறினார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா கூறுகின்றார்கள் : 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை என்றும் முஹம்மத் அவர்கள் இறைத்தூதர் என்றும் உறுதியாக நம்புதல், தொழுகையை நிலை நிறுத்துதல், ஸகாத்து வழங்குதல், ஹஜ் செய்தல், ரமாழானில் நோன்பு நோற்றல், ஆகிய ஐந்து தூண்கள் மீது இஸ்லாம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது'

முஆத் இப்னு ஜபல்(ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள். நான் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்குப் பின்னால் 'உஃபைர்' என்று அழைக்கப்படும் கழுதையின் மீது அமர்ந்திருந்தேன். அப்போது அவர்கள், 'முஆதே! அல்லாஹ்வுக்கு அடியார்கள் செய்ய வேண்டிய கடமை என்ன என்பதை நீர் அறிவீரா? மேலும் அடியார்களுக்கு அல்லாஹ் ஆற்ற வேண்டிய கடமை யாது என்பதையும் நீர் அறிவீரா என்று (என்னிடம்) கேட்டார்கள். அதற்கு நான், 'அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்' என்று பதிலளித்தேன். அல்லாஹ்வின் தூதர் அவர்கள், ' அடியார்கள் அல்லாஹ்வுக்குச் செய்யவேண்டிய கடமை என்னவென்றால், அவர்கள் அவனை மாத்திரமே வழிபட வேண்டும்; அவனுக்கு எதையும் இணையாக்கக் கூடாது. அல்லாஹ்வின் மீது அடியார்களுக்கு உள்ள உரிமை –கடமை யாதெனில், அவனுக்கு எதையும் இணை கற்பிக்காமல் இருப்பவரை (மறுமையில்) அவன் வேதனை செய்யாமல் இருப்பதாகும்' என்று கூறினார்கள். 'அல்லாஹ்வின் தூதரே! இந்த நற்செய்தியை மக்களுக்கு அறிவிக்கட்டுமா?' என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள், 'மக்களுக்கு இந்த நற்செய்தியை (இப்போது) அறிவிக்காதீர்;. அவர்கள் இந்தச் செய்தியை மட்டுமே சார்ந்து (நற்செயல்களில் ஈடுபடாமல்) இருந்து விடுவார்கள்' என்று பதில் அளித்தார்கள்.

அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'ஒரே வாகனத்தின் மீது முஆத் (ரழியல்லாஹு அன்ஹு )அவர்கள் நபி ஸல்லல்லாஹு அiலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பின்னே அமர்ந்திருக்கும் நிலையில், நபியவர்கள் 'முஆதே! என்று அழைத்தார்கள். 'இதோ உள்ளேன் அல்லாஹ்வின் தூதர் அவர்களே! (கட்டுப்படுவதைப்) பெரும் பேறாகவும் கருதுகிறேன்' என்று முஆத் ரழியல்லாஹு அன்ஹு கூறினார். முஆதே!' என்று என மீண்டும் நபி ஸல்லல்லாஹு அiலைஹிவஸல்லம் அவர்கள் அழைத்தார்கள். 'இதோ உள்ளேன் இறைத்தூதர் அவர்களே! (கட்டுப்படுவதைப்) பெரும் பேறாகவும் கருதுகிறேன்' என மீண்டும் முஆத் (ரழியல்லாஹு அன்ஹு கூறினார். இவ்வாறு மூன்று முறை கூறி அழைத்தார்கள். பிறகு 'தன் உள்ளத்தினால் உண்மையான எண்ணத்துடன் வணங்கி வழிபடுவதற்குரிய உண்மையான இறைவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை என்றும், முஹம்மத் அல்லாஹ்வின் தூதராவார்கள் என்றும் உறுதியாக நம்பும் எவரையும் அல்லாஹ் நரகத்திற்குச் செல்லவதை தடுக்கிறான்' என்று நபி ஸல்லல்லாஹு அiலைஹிவஸல்லம அவர்கள் கூறினார்கள். அப்போது 'இறைத்தூதர் அவர்களே! இச்செய்தியை நான் மக்களுக்கு அறிவித்து விடட்டுமா? அவர்கள் மகிழ்ந்து போவார்களே!' என்று முஆத் கேட்டதற்கு 'அவ்வாறு நீர் அறிவிக்கும் அச்சமயத்தில் (இது மட்டும் போதுமே என்று) அவர்கள் அசட்டையாக இருந்துவிடுவார்கள்' என நபியவர்கள் கூறினார்கள். இருப்பினும் மார்க்க அறிவை மறைத்த குற்றத்திற்கு ஆளாகாமலிருப் பதற்காக முஆத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் தமது இறுதிக் காலத்தில் இதனை அறிவித்தார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அவர்கள் கூறியதை தான் கேட்டதாக தாரிக் இப்னு அஷ்யம் அல்அஷ்ஜஈ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்துள்ளார்கள் : 'அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை (லாஇலாஹ இல்லல்லாஹ்) என்று யார் (உறுதிமொழி) கூறி, (மக்களால்) வழிபாடு செய்யப்படும் இதர தெய்வங்களை நிராகரித்து விடுகிறாரோ அவரது உடைமையும் உயிரும் பாதுகாப்புப் பெற்றுவிடும். அவரது (இரகசியமான விடயம் குறித்த) விசாரணை அல்லாஹ்வின் பொறுப்பில் உள்ளது'.

ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : நபி ஸல்லல்லலாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் ஒரு மனிதர் வந்து அல்லாஹ்வின் தூதரே! சுவர்கத்தையும் நரகத்தையும் விதியாக்கும் இரு விடயங்கள் என்ன? என்று கேட்டார். அதற்கு நபியவர்கள் யார் அல்லாஹ்வுக்கு எந்த ஒன்றையும் இணைவைக்காது மரணிக்கிறாரோ அவர் சுவர்க்கம் நுழைவார். யார் அல்லாஹ்வுக்கு ஏதாவது ஒன்றை இணைவைத்தவராக மரணிக்கிறாரோ அவர் நரகம் நுழைவார் என்று கூறினார்கள்.

அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஒரு வார்த்தையை கூற அதற்கு நான் வேறு ஒன்றை கூறினேன். நபியவர்கள் 'அல்லாஹ்வுக்கு நிகராக வேறொருவரை அழைக்கும் நிலையில் மரணித்தவர் நரகில் நுழைவார்'. அப்போது நான் அல்லாஹ்வுக்கு நிகராக வேறொருவரை அழைக்காத நிலையில் மரணித்தவர் சுவர்க்கம் நுழைவார் என்று கூறினேன்.

இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா கூறுகின்றார்கள் : நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் முஆத் இப்னு ஜபல் ரழியல்லாஹு அன்ஹு அவர்களை யமன் நாட்டிற்கு ஆளுநராக அனுப்பிய போது பின்வருமாறு கூறினார்கள்: 'நீர் வேதமுடையவர்களிடத்தில் செல்கிறீர். அவர்களிடம் சென்றடைந்துவிட்டால் வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை முஹம்மது அல்லாஹ்வின் தூதராவார் என்று (ஏகத்துவத்திற்கு) சாட்சி சொல்லும் படி அவர்களை அழைப்பீராக!. இதற்கு அவர்கள் (இசைந்து) உமக்குக் கட்டுப்பட்டால், 'அல்லாஹ் தினமும் ஐவேளை தொழுவதைக் கடமையாக்கியுள்ளான்' என்பதை அவர்களுக்கு அறிவிப்பீராக! அவர்கள் இதற்கும் (இசைந்து) உமக்கு கட்டுப்பட்டால் 'அல்லாஹ் அவர்களில் செல்வந்தர்களிடமிருந்து பெற்று அவர்களில் ஏழைகளுக்குக்கு வழங்குவதற்காக ஸகாத்தைத் கடமையாக்கியுள்ளான்' என அவர்களுக்கு அறிவிப்பீராக! அவர்கள் இதற்கும் (இசைந்து) உமக்குக் கட்டுப்பட்டால் அவர்களின் பொருட்களில் விலையுயர்ந்த பொருட்களை எடுப்பதை குறித்து உம்மை எச்சரிக்கிறேன். அநீதி இழைக்கப் பட்டவனின் பிரார்த்தனைக்கு பயந்து கொள்ளும். ஏனெனில் அவனுக்கும் இறைவனுக்கும் மத்தியில் எந்தத் திரையும் கிடையாது'.

அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள் : இறைத்தூதர் அவர்களே! மறுமை நாளில் தங்களின் பரிந்துரைக்குத் தகுதி படைத்த மனிதர் யார்?' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம அவர்களிடம் நான் கேட்டபோது, 'அபூ ஹுரைராவே! என்னைப் பற்றிய செய்திகளின் மீது உமக்கிருக்கும் பேரார்வம்; எனக்குத் தெரியும். எனவே, இச்செய்தியைப் பற்றியும் உமக்கு முன்னர் யாரும் என்னிடம் கேட்க மாட்டார்கள் என நான் நம்பியிருந்தேன்' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறிவிட்டு, 'மறுமை நாளில் மக்கள் அனைவரிலும் என் பரிந்துரைக்குத் தகுதி பெற்றவர் யாரெனில், உள்ளத்தினால் - தூய்மையான எண்ணத்துடன் 'உண்மையாக வணங்கி வழிபடுவதற்குரியவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை என்று சொன்னவர்தான்' என்று கூறினார்கள்'.

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழில்லாஹு அறிவித்துள்ளார்கள் : 'இறைநம்பிக்கை (ஈமான்) என்பது 'எழுபதுக்கும் அதிகமான' அல்லது 'அறுபதுக்கும் அதிகமான' கிளைகள் கொண்டதாகும். அவற்றில் உயர்ந்தது 'அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை' என்று கூறுவதாகும். அவற்றில் தாழ்ந்தது, தொல்லை தரும் பொருளைப் பாதையிலிருந்து அகற்றுவதாகும். வெட்கமும் இறைநம்பிக்கையின் ஒரு கிளையாகும்'.